2026 ஒக்டோபர் 08 ஆம் திகதி
2026 ஒக்டோபர் 06 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தின்’ (Prevention of Organised Crimes Bill) உள்ளடக்கங்கள் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) தனது தீவிர கவலையை வெளியிடுகிறது. இச்சட்டமூலமானது மிகப்பரந்த, தெளிவற்ற மற்றும் விரிவான தாக்கத்தைக் கொண்ட மொழியமைப்பில் வரைவு செய்யப்பட்டுள்ளதுடன், போதிய நேரடியான பாதுகாப்பு வழிமுறைகளையோ அல்லது தற்காப்பு நடைமுறைகளையோ கொண்டிருக்கவில்லை. சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் நீண்ட போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்புகளை இது பின்னோக்கித் தளர்த்துகிறது. மேலும், கைது மற்றும் தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்கு இணையான அதிகாரத்துவக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், சித்திரவதைகள் தீவிரமடைவதற்கும் அடிப்படை உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கிறது. ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTB) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளிலேயே இச்சட்டமூலமும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையானது, அரசாங்கத்தின் காலத் தெரிவு மற்றும் நோக்கம் தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இது CPA இன் ஆரம்பகட்ட அறிக்கையாகும். இச்சட்டமூலத்தின் மிகக் கடுமையான மற்றும் அச்சுறுத்தலான ஏற்பாடுகள் சிலவற்றையே இது ஆராய்கிறது. இது முழுமையான பகுப்பாய்வு அல்ல. CPA உரிய காலத்தில் மேலும் விரிவான கருத்துரையொன்றை வெளியிடக்கூடும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தனிநபர்கள், சமூகங்கள், பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையும், அதற்கெதிராகப் பலகோணங்களிலான அணுகல் நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் CPA ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், இத்தகைய இத்துறையிலான எந்தவொரு சட்டவாக்கத்திற்கும் கவனமான பரிசீலனை, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான கலந்தாலோசனைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அத்தகைய எந்தவொரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இச்சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமுறைமை ஆகியவற்றின் மீது பாரிய விளைவுகளைக் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தபோதிலும், எவ்வித பொதுக் கலந்தாலோசனைகளும் இன்றி இச்சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுள்ளது.
நாடு கடந்து புரியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்திற்கு (UN Convention against Transnational Organised Crime) செயல்வடிவம் கொடுப்பதாகவே இச்சட்டமூலம் தன்னைக் காண்பித்துக்கொள்கிறது. இச்சமயவாயம் 2003 இல் நடைமுறைக்கு வந்ததோடு, இலங்கை அதனை 2006 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இச்சாசனத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னரான கடந்த இருபது ஆண்டுகளில், அதனைச் சட்டப்பூர்வமாக அமல்படுத்துவது குறித்து எவ்வித பகிரங்க உரையாடல்களோ சட்டச் சீர்திருத்தக் கலந்துரையாடல்களோ இடம்பெற்றிருக்கவில்லை. அவ்வாறிருக்கையில், தற்பொழுது இச்சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முனைவது ஏன் என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது. CPA இச்சட்டமூலத்தின் கட்டமைப்பை நேர்மையற்ற ஒன்றாகவே கருதுகிறது. ஏனெனில், சர்வதேச சமவாயத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கு இச்சட்டமூலத்தில் உள்ள பெரும்பாலான விடயங்கள் அவசியமானவையல்ல. சர்வதேசக் கடப்பாடொன்றை நிறைவேற்றும் போர்வையில், ஏனைய மற்றும் இதுபோன்ற சட்டங்களில் கடுமையாகப் போராடிப் பெறப்பட்ட பாதுகாப்புகளைப் பின்னடைவுக்குட்படுத்தவே இச்சட்டமூலம் முயல்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள பின்னணியிலேயே இது நிகழ்கிறது. நடைமுறையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பல அடக்குமுறை அம்சங்களை வேறு பெயரில் மீண்டும் கொண்டுவரவே இச்சட்டமூலம் முயல்கிறது. மேலும், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTB) மூலம் கொண்டுவர முற்பட்ட மிக அடிப்படை நடைமுறைச் சீர்திருத்தங்களைக்கூட நடைமுறையில் முற்றாகப் பாழாக்கிவிடும்.
இச்சட்டமூலத்தின் எல்லை மிகப்பரந்ததாகும். பிரிவு 3 இன் படி, நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய எந்தவொரு குற்றமும், மற்றும் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள நீண்ட குற்றப் பட்டியலின் கீழ்வரும் பிற குற்றங்களும் ‘பாரதூரமான குற்றம்’ என வரையறுக்கப்படுகின்றன. இதன் மூலம் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பிற சட்டங்களின் கீழ் வரும் இருதார மணம், ஆவணப் போலி, திருட்டு முதல் பதிப்புரிமை மீறல், உரிமமற்ற சூதாட்டம், வனக் குற்றங்கள் மற்றும் அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் வரையிலான பரந்த அளவிலான குற்றங்கள் இச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன. மேலும், பிரிவு 66 இன் கீழ், மூன்று பேரைக் கொண்ட எந்தவொரு குழுவும், எவ்வித முறையான கட்டமைப்பும் இல்லாவிட்டாலும் கூட “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவாக” கருதப்பட முடியும். இப்பிரிவுகள் மிகவும் தெளிவற்றதாகவும் விரிவான அதிகாரங்களை வழங்குவதாகவும் அமைந்துள்ளன. சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்புகள்கூட இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மறுக்கப்படும் என்பதனால், இது குறிப்பாகச் சிக்கலானது. அத்துடன், தீர்மானிப்பதில் நிறைவேற்று அதிகாரத்திற்கு இது பரந்த விருப்புரிமை அதிகாரத்தையும் அளிக்கிறது.
மேலும், பிரிவு 4(2) இன் கீழ், ஒருவர் ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளாரா என்பதைத் தீர்மானிக்க, அவரது ஆடை, கைச்சைகைகள், பச்சை குத்தல், கொண்டுள்ள தொடர்புகள் மற்றும் அவர் செல்லும் இடங்கள் போன்றவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள முடியும். இத்தகைய ஏற்பாடுகள், ஒருவரது குற்றச் செயலைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவரது கூட்டுறவையும் சமூகத் தொடர்புகளையும் குற்றமயமாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன. இந்த சட்ட ஏற்பாடுகள் இளைஞர்கள், விளிம்புநிலைச் சமூகங்கள், போராட்டக்காரர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையாளர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஏதுநிலைகள் அதிகமாகும்
இச்சட்டமூலமானது தன்னிச்சையான தடுப்புக் காவல் முறையொன்றை நிறுவுகிறது. பிரிவு 20(1) இன் படி, சந்தேகநபர் ஒருவரை 72 மணிநேரம் வரை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதன்பின்னர், காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரால் (ஒரு நிறைவேற்று அதிகாரி) பிரிவு 21 இன் கீழ் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவின் மூலம், ஒரு சந்தேகநபரைப் பொலிஸ் காவலில் ஓராண்டு காலம் வரை தடுத்து வைக்க முடியும். பிரிவு 20(3)(a) இன் படி, நீதிவானுக்கு எவ்வித விருப்புரிமை அதிகாரமும் கிடையாது என்பதோடு; அவர் அவ்வுத்தரவை நடைமுறைப்படுத்த மட்டுமே வேண்டும். பிரிவு 25 இன் கீழ், ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள நபர்களை மீண்டும் பொலிஸ் காவலுக்கு மாற்றி, தனிமைப்படுத்தி வைக்க முடியும். பிரிவு 23 இன் கீழ், மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்கப்பட முடியும்; சில சந்தர்ப்பங்களில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பிணை பரிசீலிக்கப்படும். மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு சந்தேகநபரை ஓராண்டு காலம் வரை விளக்கமறியலில் வைத்திருக்க முடியும். நிறைவேற்று அதிகார உத்தரவுகளின் கீழ் நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்டகாலம் பொலிஸ் காவலில் வைப்பதானது, சித்திரவதைகளும் தவறான நடத்தைகளும் இடம்பெறுவதற்கான சூழலையே உருவாக்குகிறது.
இச்சட்டமூலத்தின் சான்றுகள் குறித்த ஏற்பாடுகளினால் இந்த அபாயங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. பிரிவு 46 ஆனது கட்டளைச் சட்டத்தின் 25, 26 மற்றும் 30 ஆகிய பிரிவுகளிலுள்ள சட்டப் பாதுகாப்புகளை நீக்குகிறது. பிரிவு 47 இன் படி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) அல்லது அதற்கு மேற்பட்ட தரத்திலான பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியமாக மாறுகின்றன. இலங்கையில் வற்புறுத்திப் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணி காரணமாகவே சான்றுகள் கட்டளைச் சட்டத்தில் அப்பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன. பிரிவு 48 இன் கீழ், குறுக்கு விசாரணை செய்ய முடியாத நபர்களின் வாக்குமூலங்களும் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். பிரிவு 50 இன் கீழ், ஒரு குழுவின் உறுப்பினர் நிலையை நிரூபிக்க, ஒருவரது கடந்தகால நடத்தை மற்றும் தொடர்புகள் சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாம்.
இச்சட்டமூல வரைவில் காணப்படும் குறைபாடுகள், முறையான கலந்தாலோசனைகள் இடம்பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறைத்தண்டனைத் தகுதியானது “ஏதேனுமொரு வகையிலான” (of either description) சிறைத்தண்டனைக்கு மட்டுமே சாத்தியமாகும் என்பதால், மரண தண்டனை அல்லது கடுங்காவல் தண்டனையை மட்டுமே தண்டனையாகக் கொண்ட கொலை, பாலியல் வன்புணர்வு மற்றும் கொள்ளை போன்ற பாரதூரமான குற்றங்கள் இச்சட்டமூலத்தின் வரம்பிற்குள் வருமா என்பதில் சட்ட ரீதியான தெளிவின்மை காணப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டம், அதன் பயன்பாடு குறித்த இத்தகைய அடிப்படைத் தெளிவின்மைகளுடன் இயற்றப்படக் கூடாது. .
அத்துடன், இச்சட்டமூலத்தில் புலனாய்வு அதிகாரங்கள் தொடர்பிலும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளையும் கொண்டிருக்கவில்லை. பிரிவு 17 பிடியாணை இன்றிய சோதனைகளுக்கு அனுமதியளிப்பதோடு, பிரிவு 28 மற்றும் 45 என்பன தகவல் தொடர்புகளை இடைமறிப்பது உட்பட டிஜிட்டல் கண்காணிப்புக்கும் வழிவகுக்கின்றன. பிரிவு 44(4) இன் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்றி வாடிக்கையாளர்களின் தரவுகள், அழைப்பு விபரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பெற முடியும். பிரிவு 45 இன் கீழ், குறியாக்கம் செய்யப்பட்ட (encrypted) சாதனங்களைத் திறக்க வற்புறுத்த முடியும். பிரிவு 65 பொலிஸாருக்குத் தகவல்களை வழங்க வேண்டிய பரந்த கடப்பாட்டை உருவாக்குகிறது; பிரிவு 14 நீதிமன்ற விசாரணைகள் தொடர்பான ஊடக அறிக்கையிடல்களைக் கட்டுப்படுத்துகிறது. இவற்றின் கூட்டு விளைவாக, தனியுரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமைகளுக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிவு 59 இல் உள்ள பரந்த விலக்களிப்புச் ஏற்பாடானது, அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.
பரந்த மற்றும் தெளிவற்ற அதிகாரங்கள் வழங்கப்படும்போது, அவை வழக்கமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதையே இலங்கையின் கடந்தகால அனுபவங்கள் காண்பிக்கின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் என்பவை உடனடியாகக் கையாளப்பட வேண்டிய தீவிரமான பிரச்சினையாகும். ஆனால் அதற்கான தீர்வு சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர, அவசரகால அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் அமைதல் கூடாது.
இத்தகைய கடுமையான அச்சங்களைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் தற்போதைய வடிவத்திலுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தை’ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என CPA அரசாங்கத்தை கோருகிறது. அடிப்படை உரிமைகளைப் பாதகமாகப் பாதிக்கக்கூடிய சட்டங்கள், தகுந்த பரிசீலனை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு இன்றி அவசரமாக நிறைவேற்றப்படக் கூடாது. தன்னிச்சையான அல்லது நிறைவேற்று அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தெளிவான மற்றும் அமல்படுத்தக்கூடிய பாதுகாப்புகளுடன், திறந்த மற்றும் அர்த்தமுள்ள கலந்தாலோசனை நடைமுறையின் மூலமே எந்தவொரு புதிய சட்டக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான போராட்டம் என்பது, தட்டுப்பாடற்ற அரச அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கோ, பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சட்டம் பாதுகாக்க முனையும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் சீரழிப்பதற்கோ ஒரு போர்வையாக அமையக்கூடாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்