CPA Comms Officer on 5 October, 2026

PSTB – 2026ஐ மீளத் திரும்பப்பெற வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும் CPA கோருகிறது. அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடியதும், ஜனநாயக சமூகத்தின் விழுமியங்களுக்கு அமைவான முறையில் பாதுகாப்பு விடயங்களை கையாளக்கூடியதுமான மறுசீரமைப்புச் செயற்பாடொன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

Categories: Research and AdvocacyStatement
 

2026 செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதியன்று வர்த்தமானியில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTB – 2026)வெளியிடப்பட்டமையை மாற்றுக்  கொள்கைகளுக்கான நிலையம் (CPA) கவலையுடன் அவதானிக்கிறது. இச்சட்டமூலத்தின் முந்தைய வடிவமொன்று (PSTB – 2025) 2025 டிசம்பரில் பகிரங்கப்படுத்தப்பட்டதுடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஒரு மாத காலத்திற்குள் பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியிருந்தது. இவ்வரைவு குறித்தும் உண்மையான கலந்தாலோசனையின் அவசியம் குறித்தும் ஆரம்பத்தில் பல கவலைகளை எழுப்பிய CPA, பின்னர் அதன் ஏற்பாடுகள் தொடர்பான விரிவான பகுப்பாய்வை வழங்கியதுடன், நீதி அமைச்சுக்குக் குறிப்பிட்ட பரிந்துரைகளையும் முன்வைத்தது.

புதிதாக முன்மொழியப்பட்டுள்ள PSTB – 2026 சட்டமூலமானது, அதன் ஒட்டுமொத்த அமைப்பில், PSTB – 2025, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (2018), மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் (2023 / 2024) ஆகியவற்றை பெரிதும் ஒத்ததாகவுள்ள அதேவேளை, குறிப்பிட்ட சில சட்ட ஏற்பாடுகளில் சில முன்னேற்றங்களைக் மேற்கொண்டுள்ளதனை CPA கவனமாக அவதானிக்கிறது. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அதே சிக்கல்மிக்க சட்டக் கட்டமைப்பின் மீதே கட்டியெழுப்ப முற்படுவதால் PSTB – 2026 மிகவும் கவலைக்கிடமானதாக அமைகிறது. எனவே, அரசாங்கம் தனது தேர்தல் பிரசார அறிக்கைகளுக்கு அமைவாக PSTB – 2026ஐ மீளத் திரும்பப்பெற வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும் CPA கோருகிறது. அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடியதும், ஜனநாயக சமூகத்தின் விழுமியங்களுக்கு அமைவான முறையில் பாதுகாப்பு விடயங்களை கையாளக்கூடியதுமான மறுசீரமைப்புச் செயற்பாடொன்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது (PTA) நிபந்தனைகளின்றி இரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, அத்தகைய பரந்த அதிகாரங்களைக் கொண்ட சட்டமொன்றினால் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படக்கூடாது எனும் தனது முன்னைய நிலைப்பாட்டினை CPA மீண்டும் வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது அளவுக்கு மீறிய பரந்த வரம்பைக் கொண்டதும், தெளிவற்றதுமானதுடன், இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான பல ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான கோரிக்கையானது, ஒரு சில ஆட்சேபனைக்குரிய ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதோடு மாத்திரம் நின்றுவிடவில்லை; மாறாக, அதன் ஒடுக்குமுறை கட்டமைப்பை முற்றாகக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். CPA முன்னர் குறிப்பிட்டது போல், பயங்கரவாதத் தடைச் சட்டமானது அது இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அடக்குமுறைக்கான ஒரு கருவியாக இருந்து வருவதுடன், சித்திரவதை மற்றும் பிற துஷ்பிரயோக நடைமுறைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

ஒரு ஜனநாயக அரசின் உண்மையான பாதுகாப்புத் தேவைகளையும் அதன் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களையும் சமநிலைப்படுத்தக்கூடிய ஒரு சட்டத்திற்கான பொருத்தமான அளவுகோலாக பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அமையவில்லை. PTA-வை விட மேம்பட்டதாக இருப்பது மட்டுமே PSTB – 2026 சட்டமூலமானது இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாதங்களுக்கும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் சட்டபூர்வத்தன்மை, அவசியத்தன்மை, விகிதாசாரத்தன்மை மற்றும் பாகுபாடின்மை ஆகிய கொள்கைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோரும் அதன் சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் இணங்கியதாக அமைந்துவிடாது.

PSTB – 2026 சட்டமூலமானது, சில நடைமுறைப் பாதுகாப்பு வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அதே அடிப்படைப் குறைபாடுகளைத் தொடர்கிறது என CPA சுட்டிக்காட்டுகிறது. பின்வரும் விடயங்கள் குறித்து CPA கவலை கொண்டுள்ளது:

  • PSTB – 2026 இல் பயங்கரவாதக் குற்றத்திற்கான வரைவிலக்கணத்தில் சில முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், அது இன்னமும் அளவுக்கு மீறிய பரந்த வரம்பைக் கொண்டதாகவே உள்ளது. இத்தகைய குற்றத்தைப் புரிந்ததாகவோ அல்லது அத்தகைய குற்றத்திற்கு உதவியதாகவோ தூண்டியதாகவோ சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும் சாதாரண சட்டத்தின் கீழ் நடைமுறையில் இருப்பதைவிடக் கடுமையான சட்ட நடைமுறைக்கு உட்படுத்தப்படுவர் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது குறிப்பாகச் சிக்கலானதாகும்.
  • இச்சட்டமூலமானது, சட்ட அமுலாக்கம் தொடர்பான இத்தகைய பணிகளில் இராணுவத்தின் ஈடுபாடு விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலவும் நெறிமுறையைப் பொருட்படுத்தாமல், காவல்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கும் நடைமுறையைத் தொடர்கிறது.
  • சந்தேக நபர்களை வழக்கு விசாரணைக்கு முன்னர் நிர்வாகத் துறையினரால் தடுப்புக் காவலில் வைப்பதற்கு (தடுப்புக் காவல் உத்தரவுகள்) இச்சட்டமூலம் இடமளிக்கிறது. சில நடைமுறைப் பாதுகாப்பு வழிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், நிர்வாகத் தடுப்புக் காவலானது அதிகாரப் பிரிப்புக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்றும், மக்களின் நீதித்துறை அதிகாரத்தை வேறொரு தரப்பிற்கு ஒப்படைப்பதாகும் என்றும் CPA கருதுகிறது.
  • கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் ஒன்றிணைவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது இச்சட்டமூலம் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  • பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை அதே வடிவில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) நடைமுறையை இச்சட்டமூலம் நீக்குகிறது. இருப்பினும், நீதிவான்களிடம் சந்தேக நபர்கள் வழங்கும் அறிக்கைகளுக்கான சிறப்புச் சாட்சிய முறைமையை இது தக்கவைத்துள்ளது. குறிப்பாக, சந்தேக நபர் தடுப்புக் காவலில் இருக்கும் சூழ்நிலைகளில், இந்தப் பாதுகாப்பு வழிமுறைகள் போதுமானவையா என்பது தொடர்ந்து கவலையளிக்கும் விடயமாக உள்ளது.

இவை ஒட்டுமொத்த சட்டமூலத்திலும் காணப்படும் முக்கிய கவலைக்குரிய விடயங்களில் சில மட்டுமே. அளவுக்கு மீறிய பரந்த வரைவிலக்கணங்கள், நிர்வாகத் தடுப்புக் காவல் மற்றும் நிர்வாகத் துறை மேலதிக அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொள்வது ஆகியவை, இலங்கை காவல்துறையினுள் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளை மூடிமறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறுக்குவழிகளாகும். பல தசாப்தங்களாக இலங்கை காவல்துறை இராணுவமயமாக்கப்பட்டமையும் அரசியல்மயமாக்கப்பட்டமையும், சிக்கலான புலனாய்வுகளில் பொலிஸார் திறம்பட ஈடுபடும் திறனைப் பாதித்தமை உள்ளிட்ட பல கட்டமைப்புசார் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டன; அதற்குப் பதிலாக, குடிமக்களின் பாதுகாப்பை கடுமையாகப் பாதித்த தற்காலிகத் தீர்வுகளை வழங்க முற்பட்டன.

PSTB – 2026 சட்டமூலமானது இந்த அணுகுமுறையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படை அமைப்பில் நிலவும் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறுவதாகவும் CPA கவலை தெரிவிக்கிறது. இந்த அணுகுமுறை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துவதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) உள்ளடங்கலாக அடக்குமுறைச் சட்டங்களை இரத்து செய்வோம் என்ற ஜனாதிபதி மற்றும் NPP அரசாங்கத்தின் தேர்தல் பிரசார வாக்குறுதிக்கும் முரணானதாகும்.

எனவே, நீண்டகாலமாக நிலவி வரும் கவலைகளுக்குத் தீர்வுகாணக்கூடியதும், ஜனநாயக சமூகத்தின் விழுமியங்களுக்கு அமைவான முறையில் பாதுகாப்புக் கவலைகளைக் கையாளக்கூடியதுமான ஒரு மறுசீரமைப்புச் செயற்பாட்டை அரசாங்கம் ஆரம்பிக்கும் அதேவேளை, PSTB – 2026 ஐத் திரும்பப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்து செய்யவும் CPA அரசாங்கத்தைக் கோருகிறது.