2026 ஒக்டோபர் 08 ஆம் திகதி
2026 ஒக்டோபர் 06 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் சட்டமூலத்தின்’ (Prevention of Organised Crimes Bill) உள்ளடக்கங்கள் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் (CPA) தனது தீவிர கவலையை வெளியிடுகிறது. இச்சட்டமூலமானது மிகப்பரந்த, தெளிவற்ற மற்றும் விரிவான தாக்கத்தைக் கொண்ட மொழியமைப்பில் வரைவு செய்யப்பட்டுள்ளதுடன், போதிய நேரடியான பாதுகாப்பு வழிமுறைகளையோ அல்லது தற்காப்பு நடைமுறைகளையோ கொண்டிருக்கவில்லை. சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் நீண்ட போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்புகளை இது பின்னோக்கித் தளர்த்துகிறது. மேலும், கைது மற்றும் தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்கு இணையான அதிகாரத்துவக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், சித்திரவதைகள் தீவிரமடைவதற்கும் அடிப்படை உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கிறது. ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTB) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளிலேயே இச்சட்டமூலமும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையானது, அரசாங்கத்தின் காலத் தெரிவு மற்றும் நோக்கம் தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. இது CPA இன் ஆரம்பகட்ட அறிக்கையாகும். இச்சட்டமூலத்தின் மிகக் கடுமையான மற்றும் அச்சுறுத்தலான ஏற்பாடுகள் சிலவற்றையே இது ஆராய்கிறது. இது முழுமையான பகுப்பாய்வு அல்ல. CPA உரிய காலத்தில் மேலும் விரிவான கருத்துரையொன்றை வெளியிடக்கூடும்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தனிநபர்கள், சமூகங்கள், பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையும், அதற்கெதிராகப் பலகோணங்களிலான அணுகல் நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் CPA ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும், இத்தகைய இத்துறையிலான எந்தவொரு சட்டவாக்கத்திற்கும் கவனமான பரிசீலனை, வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையான கலந்தாலோசனைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு அத்தகைய எந்தவொரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இச்சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமுறைமை ஆகியவற்றின் மீது பாரிய விளைவுகளைக் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தபோதிலும், எவ்வித பொதுக் கலந்தாலோசனைகளும் இன்றி இச்சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுள்ளது.
நாடு கடந்து புரியப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்திற்கு (UN Convention against Transnational Organised Crime) செயல்வடிவம் கொடுப்பதாகவே இச்சட்டமூலம் தன்னைக் காண்பித்துக்கொள்கிறது. இச்சமயவாயம் 2003 இல் நடைமுறைக்கு வந்ததோடு, இலங்கை அதனை 2006 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இச்சாசனத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னரான கடந்த இருபது ஆண்டுகளில், அதனைச் சட்டப்பூர்வமாக அமல்படுத்துவது குறித்து எவ்வித பகிரங்க உரையாடல்களோ சட்டச் சீர்திருத்தக் கலந்துரையாடல்களோ இடம்பெற்றிருக்கவில்லை.அவ்வாறிருக்கையில், தற்பொழுது இச்சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முனைவது ஏன் என்ற பலத்த சந்தேகம் எழுகின்றது. CPA இச்சட்டமூலத்தின் கட்டமைப்பை நேர்மையற்ற ஒன்றாகவே கருதுகிறது. ஏனெனில், சர்வதேச சமவாயத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதற்கு இச்சட்டமூலத்தில் உள்ள பெரும்பாலான விடயங்கள் அவசியமானவையல்ல. சர்வதேசக் கடப்பாடொன்றை நிறைவேற்றும் போர்வையில், ஏனைய மற்றும் இதுபோன்ற சட்டங்களில் கடுமையாகப் போராடிப் பெறப்பட்ட பாதுகாப்புகளைப் பின்னடைவுக்குட்படுத்தவே இச்சட்டமூலம் முயல்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA)முழுமையாக இரத்து செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள பின்னணியிலேயே இது நிகழ்கிறது. நடைமுறையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பல அடக்குமுறை அம்சங்களை வேறு பெயரில் மீண்டும் கொண்டுவரவே இச்சட்டமூலம் முயல்கிறது. மேலும், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்‘ (PSTB) மூலம் கொண்டுவர முற்பட்ட மிக அடிப்படை நடைமுறைச் சீர்திருத்தங்களைக்கூட நடைமுறையில் முற்றாகப் பாழாக்கிவிடும்.